கோலாலம்பூர்:
தொழிலாளர் காப்புறுதி முறை சட்டத்தில் திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் நேற்று சமர்ப்பித்திருப்பதை மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (மதொசகா) வரவேற்றது. 2017 தொழிலாளர் காப்புறுதிச் சட்டம் (சட்டம் 800) திருத்த மசோதா முதல் வாசிப்புக்கு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தச் சட்டதிருத்த மசோதாவானது நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தினரின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மிக முக்கியமான நடவடிக்கையாக உள்ளது என்று மதொசகா தேசியத் தலைவர் டத்தோ அப்துல் ஹலிம் மன்சோர் தெரிவித்தார்.
மனிதவள அமைச்சு, பெர்கேசோ ஆகிய இரண்டு தரப்புகளும் ஒன்றிணைந்து தொழிலாளர் காப்புறுதித் திட்டத்தின் வழி தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்தி இருக்கின்றன. வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு இது மிகப்பெரிய பயனைத் தரும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பெர்கேசோவில் சந்தா செலுத்தும் தொழிலாளர் தரப்பினர் காக்கப்படுவதை இத்திட்டம் உறுதி செய்திருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேசமயம் மாற்று வேலைகளில் அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்குக் கூடுதல் அனுகூலங்கள், புதிய நன்மைகள் கிடைப்பதற்கும் இத்திட்டம் வழிவகுக்கிறது. போக்குவரத்து உதவி அலாவன்ஸ் தொகையும் இதில் அடங்கி இருக்கிறது. இத்திட்டமானது ஒரு தொழிலாளர் புதிய இடத்தில் சிறந்த மனநிலையுடன் மேற்கொள்வதற்கு வழிவகுக்கிறது என்று குறிப்பிட்ட அப்துல் ஹலிம், நடப்பு சவால்மிக்க சூழ்நிலைகளில் இத்திட்டம் தொழிலாளர்களுக்கு சுமுகமான முறையில் சலுகளை எளிதாக்கி இருக்கிறது என்றார்.
வேலை இழக்கும் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படுவதை மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைமைத்துவ அணி உறுதி செய்வதில் தெளிவான கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது. இப்புதிய சட்டதிருத்த மசோதாவானது வேலை இழந்த தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதோடு புதிய இடத்தில் வேலையைத் தொடங்குவதற்குரிய உற்சாகத்தையும் வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.