Offline
Menu
முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்
By Administrator
Published on 11/06/2025 14:55
News

சென்னை:

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் களமிறங்குவதற்கு அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து பல அரசியல் கட்சியினர் விஜய் மீது விமர்சனங்களை அடுக்கி வந்தனர். விஜய்யும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணமும் வழங்கினார்.

இந்நிலையில், தவெக கட்சி, வரும் சட்ட மன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதற்காக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் கூட்டப்பட்டது.

அந்தக் கூட்டத்தில், கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பங்கேற்றனர். முதலாவதாக கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கியும், முதல் அமைச்சர் வேட்பாளராக விஜய்யை அறிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தவெக கட்சியைத் தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என அதிமுக, பாஜக கட்சிகள் தொடர் முயற்சி எடுத்து வந்த நிலையில், அந்த அழைப்பைத் தற்போது தவெக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் பேச்சைப் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்காக, அக்கட்சியினர் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக்கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே சிறப்புப் பொதுக்குழுவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

Comments