ஆசியா முழுவதும் அரிசி விலை மேலும் குறையலாம் என்று நிபுணர்கள் முன்னுரைக்கின்றனர். இந்தியாவில் அரிசி விளைச்சல் அதிகரித்திருப்பதே இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
பொதுவாக இந்தியா உலகளவில் முக்கியமான அரிசி ஏற்றுமதி நாடாக இருந்தாலும், தற்போது உள்நாட்டு உற்பத்தி பெரிதும் உயர்ந்துள்ளதால் விலை குறைந்துள்ளது. இதனால் உள்ளூர் சந்தையில் கூடுதல் சரக்கு குவிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசு விவசாயிகளை அரிசி சாகுபடியில் அதிக ஈடுபாடு காட்ட ஊக்குவித்து வருவதும் உற்பத்தி வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. விலை குறைவின் காரணமாக சில இறக்குமதியாளர்கள் மூன்று முதல் ஐந்து மாத தேவைக்குரிய அரிசியை முன்கூட்டியே வாங்கி கிடங்குகளில் சேமித்து வருகின்றனர். இது குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகிறது.
தற்போது சந்தையில் தேவையை விட அதிக அளவில் அரிசி இருப்பதால் வட்டார அளவில் விலை சரிவு தொடரும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளதுடன், தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் விவசாயிகள் விலை சரிவால் சற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதி நாடுகளில் ஒன்றான பிலிப்பீன்ஸ், உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் 2026 ஏப்ரல் மாதம் வரை அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.