Offline
Menu
பிறந்தநாளன்று புல்லட் பைக் பரிசளித்த தந்தை: பஸ் மீது மோதி பள்ளி மாணவன் பலி
By Administrator
Published on 11/09/2025 14:20
News

லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் குமார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு வைபவ் ஷா (வயது 17) என்ற ஒரே மகன் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இதனிடையே, நன்றாக படித்தால் பைக் வாங்கி தருவதாக வைப்வ் ஷாவிடம் அவரது தந்தை கூறியுள்ளார். அதன்படி, வைபவ் ஷா கடந்த 3 வாரங்களுக்குமுன் தனது 17வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் பரிசாக வைபவ் ஷாவிற்கு அவரது தந்தை சந்தோஷ் புல்லட் பைக் பரிசாக அளித்துள்ளார். அந்த புல்லட் பைக்கை வைபவ் அவ்வப்போது ஓட்டியுள்ளார்.

இந்நிலையில், வைபவ் நேற்று காலை 7 மணியளவில் தனது நண்பனுடன் புல்லட் பைக்கில் ஆயிஷானா பகுதிக்கு சென்றுள்ளார். நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையில் எதிரே வந்த ஆம்னி பஸ் வைபவ் ஓட்டிவந்த புல்லட் மீது மோதியது. இதில் புல்லட்டில் இருந்த வைபவ் மற்றும் அவரது நண்பன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர்.

அங்கு வைபவ் ஷாவை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். வைபவின் நண்பனான மற்றொரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்ற ஆம்னி பஸ் டிரைவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments