நடிகரும் அரசியல்வாதியுமான தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்கும் முதல் படத்திற்கு ‘சிக்மா (SIGMA)’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எக்ஸ் (X) தளத்தில் லைகா நிறுவனம் இந்த தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லைகா சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபே, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசையமைப்பை தமன் எஸ் மேற்கொள்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட பன்மொழி திரைப்படமாக உருவாகும் இந்த படம், சென்னை, சேலம், தலகோனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தமிழ் குமரன் கூறுகையில்:
“இயக்குநர் ஜேசன் சஞ்சய் எங்களிடம் சொன்ன கதையை துல்லியமாக படமாக்கியுள்ளார். திரைக்கதை திட்டமிட்டபடி, குறிப்பிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பு முடித்தது அவரை ஒரு முழுமையான இயக்குநராக மாற்றியுள்ளது. திறமையான நடிகர்களுடன் 65 நாட்களில் 95% படப்பிடிப்பு முடிப்பது புதுமுக இயக்குநராக ஜேசனின் பெரிய சாதனை,” என்றார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் கூறுகையில்:
“’சிக்மா’ ஒரு சுவாரஸ்யமான, ஆழமான கருத்தை மையமாகக் கொண்ட படம். சமூகத்தால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒருவன், பயமின்றி தன் இலக்கை நோக்கி நகர்வதை இது கூறுகிறது. வேட்டை, கொள்ளை, நகைச்சுவை ஆகியவை கலந்த பரபரப்பான சினிமா அனுபவம் இது. இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது,” என்றார்.