சென்னை,இந்திய அளவில் தடம் பதித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார். தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர்” விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது. முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
இந்நிலையில், செவாலியர் விருது பிரபல திரைப்பட கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, இவ்விருது வழங்கப்படுகிறது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளார்.
‘எனது சினிமா குறிப்புகளில் இருந்து’ என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவிய கண்காட்சி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நாளை வரை நடைபெறும். இக்கண்காட்சியை இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையிட்டு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.