தென்னிந்திய திரைப்படங்களை அதிக தொகை கொடுத்து வாங்கும் முடிவை நெட்பிளிக்ஸ் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குபதில் நல்ல கதையம்சம் கொண்ட இணைய தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற OTT நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது நெட்பிளிக்ஸ் நல்லவிலை கொடுத்து படத்தை வாங்குவதால் இந்த முடிவு பல தமிழ் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நெட்பிளிக்ஸின் இந்த மாற்றம் தயாரிப்பாளர்கள் அதிக பட்ஜெட் படங்களை தவிர்க்கவும், உச்ச நட்சத்திரங்களின் சம்பளத்தை குறைக்கவும் வழிவகுக்கும்.
அதிக பார்வையாளர்களை கொண்ட தளமாக இந்தியா இருந்தாலும் சந்தைப்போட்டி, ஒரு பயனருக்கான சராசரி வருவாய் குறைவாக வருவது (ARPU) போன்றவை இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தென்னிந்திய திரைப்படங்களை இரட்டிப்பு மூதலீட்டை போட்டு வாங்கும் முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக நெட்பிளிக்ஸ் உள்ளது.
இருப்பினும் படங்களைவிட இணையத்தொடர்கள் நல்ல வரவேற்பை பெறுவதால், செலவை குறைத்து தங்கள் சந்தை மதிப்பை கூட்ட இந்த முடிவை கையில் எடுத்துள்ளது. தற்போது ஐதராபாத்திலும் தனது அலுவலகத்தை விரிவுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.