Offline
Menu
தாய்லாந்து வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 145-ஆக உயர்வு
By Administrator
Published on 11/29/2025 09:45
News

பாங்கோக்:

தாய்லாந்தில் முன்தோன்றாத அளவில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது.

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடையறாத கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, அந்த பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு உருவாகியுள்ளது. இதனால் 36 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், அங்கு உள்ள உள்கட்டமைப்புகள், வீடுகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

உயிரிழந்த 145 பேரில், கோங்க்லா மாவட்டத்தில் மட்டும் 110 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கிய பலர் காணாமல் போயுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் தொடர்கிறது.

நீர் வடியத் தொடங்கிய பகுதிகளில், மீட்புப்படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை மற்றும் வெள்ளத்தால் சாலைகள், வீடுகள், வாகனங்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன. சேதமடைந்த சாலைகள், தரையில் விழுந்த மின்கம்பங்கள், சகதிகளில் சிக்கிய வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Comments