Offline
Menu
டிசம்பர் இறுதிக்குள் குவந்தானில் ECRL ரயில்கள் சேவைக்கு வரவிருக்கின்றன
By Administrator
Published on 11/29/2025 09:45
News

கோலாலம்பூர்:

கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (ECRL) திட்டத்திற்கான முதல் ரயில்கள் டிசம்பர் மாத இறுதிக்குள் குவந்தான் துறைமுகத்தை வந்தடையும் என்று MRL மற்றும் ECRL நிறுவனம் ஆகியன இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த முதல் தொகுதியில் பயணிகள் சேவைக்கான இரண்டு மின்சார மல்டிபிள் யூனிட்கள் (EMU) மற்றும் சரக்கு சேவைக்கான இரண்டு மின்சார என்ஜின்கள் அடங்கும்.

ரயில்கள் சீனாவின் டாலியன் துறைமுகத்திலிருந்து புறப்படத் தயாராக உள்ளன என்றும், கடல் பயணத்தின் பின்னர் மலேசிய வர சுமார் ஒரு மாதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026ஆம் ஆண்டில் மேலும் ஒன்பது EMU ரயில்கள் வரவிருக்கின்றன. மீதமுள்ள 10 மின்சார என்ஜின்கள் அதே ஆண்டில் கட்டம் கட்டமாக வழங்கப்படும்.

ECRL பாதை, பயணிகள் ரயில்களுக்கு மணிக்கு 160 கிமீ மற்றும் சரக்கு ரயில்களுக்கு மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று, MRL தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் கூறினார்.

இந்த ரயில்கள் நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (APAD) மேற்பார்வையில் 8,000 கிலோமீட்டர் குறைபாடு இல்லா சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்படும். மேலும் “665 கிலோமீட்டர் மின்சார ரயில் பாதையில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கான பசுமை போக்குவரத்து முறையை உருவாக்கும் புதிய அத்தியாயமாக இது அமையும்,” என்று அவர் கூறினார்.

Comments