கோலாலம்பூர்:
நாடுமுழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதி பெற்ற சிறைவாசிகள் ‘SARA ’ உதவித் திட்டத்தின் கீழ் 100 ரிங்கிட்டுக்கான அத்தியாவசியப் பொருட்களை பெற்றுள்ளனர்.
சிறைத்துறை நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன், கடந்த மாதம் அனைத்து தகுதி பெற்ற கைதிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் உடைகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
Kopen எனப்படும் மலேசிய சிறைத்துறை கூட்டுறவு நிறுவனம், கைதிகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்தல், தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்தல் ஆகிய பொறுப்புகளை செய்வதாக சிறைத்துறை தலைமை இயக்குநர் டத்தோ’ அப்துல் அஸிஸ் அப்துல் ரஸாக் தெரிவித்தார்.
SARA உதவித் திட்டம் தகுதியுள்ள மலேசியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு உதவ, குறிப்பாக உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதி உதவியை வழங்குகிறது.
நாடு முழுவதும் உள்ள 67,934 கைதிகளில், 42,665 கைதிகள் சாரா திட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.