Offline
Menu
இரண்டு வாரங்களாக காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த ஆடவர் கோத்தா டாமன்சாராவில் உள்ள வீட்டில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்
By Administrator
Published on 12/12/2025 09:00
News

கோலாலம்பூர்:

கடந்த இரண்டு வாரங்களாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில், தேடப்பட்டு வந்த ஆடவர், தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று கோத்தா டாமன்சாராவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

இரவு 11.27 மணிக்கு மயக்க நிலையில் ஒரு நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷம்சுதீன் மமட் தெரிவித்தார்.

“தகவலின் பேரில், காவல்துறை அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது, மேலும் அங்குவந்த சுங்கை பூலோ மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்களால் அந்த நபர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

“பாதிக்கப்பட்டவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் அறுவை சிகிச்சை செய்ததாகத் தெரிகிறது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குற்றச் செயல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் ஷம்சுதீன் கூறினார்.

வழக்கு தொடர்பான தகவல்களைக் கொண்டவர்கள் விசாரணைக்கு உதவ அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Comments