கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலானின் பண்டார் ஸ்ரீ செண்டாயானில் உள்ள குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் இருந்து கடந்த திங்கட்கிழமை கூட்டிவரும்போது, மயக்க நிலையில் இருந்ததாக கூறப்பட்ட ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் மரணத்துக்கான தகவல், அதேநாள் மாலை 6.26 மணியளவில் கிடைத்தது என்று , சிரம்பான் காவல்துறைத் தலைவர் அசாஹர் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
“குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் இருந்து குழந்தையை எடுக்க தாயார் சென்றபோது, குழந்தை ஏற்கனவே மயக்க நிலையில் இருந்தது என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது,” என்று அவர் கூறினார்.
தாய் உடனடியாக குழந்தையை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் CPR சிகிச்சை செய்தபோதும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
32 வயதான குழந்தை பராமரிப்பாளரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய, போலீசார் அவரைத் தற்காலிகமாகக் கைது செய்தனர். அவரை பின்னர் ஜாமீனில் விடுவித்ததாக அசாஹர் தெரிவித்தார்.
குழந்தை கடந்த ஐந்து மாதங்களாக அந்தப் பராமரிப்பாளரின் பராமரிப்பில் இருந்ததாகவும், சம்பவத்திற்கு முன் குழந்தை பலவீனமாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பிரேதப் பரிசோதனையில், அவரது வயிற்றுப் பகுதியில் காயங்கள் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குழந்தை சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) – குழந்தையை கைவிடுதல், புறக்கணித்தல், ஆபத்தில் ஆழ்த்துதல் அல்லது காயப்படுத்துதல் – எனும் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக அவர் கூறினார்.