கோலாலம்பூர்:
சிரம்பானுக்கு அருகிலுள்ள பத்து கிக்கிரில் உள்ள ஜாலான் தாமான் முஸ்தாரி பகுதியில் நேற்று (சனிக்கிழமை) நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பள்ளி மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று மாலை சுமார் 5.55 மணியளவில், மூன்று மாணவிகளும் ஹோண்டா சி100 (Honda C100) மோட்டார் சைக்கிளில் தாமான் மாவாரில் இருந்து தாமான் முஸ்தாரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக ஜெம்போல் மாவட்ட காவல்துறைத் தலைவர் நோர்ஹிஷாம் முஸ்தாபார் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
குறித்த மோட்டார் சைக்கிள் சாலையில் இருந்து விலகிச் சென்று, வலதுபுறச் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விபத்து காரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (13 வயது), பின்னால் அமர்ந்திருந்த மாணவி (10 வயது) ஆகியோருக்கு தலை மற்றும் கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொருவர், 13 வயதுடைய மாணவி, தலையில் பலத்த காயங்களுடனும் கால்கள் உடைந்த நிலையிலும் கோலா பிலாவில் உள்ள துவாங்கு ஆம்புவான் நஜிஹா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் சொன்னார்.