குளுவாங்:
குளுவாங் மாவட்டத்தில் உள்ள வீடுகள் மற்றும் பள்ளிகளில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை (டிசம்பர் 17) நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளின் போது இந்த நான்கு பேரும் பிடிபட்டதாக குளுவாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கூறிய ACP பஹ்ரின் முகமட் நோ , கடந்த மாதம் இறுதியில் தாமான் குளுவாங் பாராட்டில் (Taman Kluang Barat) உள்ள ஒரு சமயப் பள்ளியின் அலுவலகத்தை உடைத்து இவர்கள் திருடியதாக நம்பப்படுகிறது என்றார்.
இவர்களின் கைது மூலம் குளுவாங் மாவட்டத்தில் நடந்த குறைந்தது ஆறு திருட்டுச் சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையின் போது, ஒரு கார் மற்றும் கார் ரிமோட் கண்ட்ரோல், ஒரு கருப்பு நிற ஸ்வெட்டர் (Sweater) மற்றும் கருப்பு நிற டி-ஷர்ட், ஒரு டெனிம் அரைக்காற்சட்டை (Denim shorts) என்பன காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன:
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மீது ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பழைய வழக்குகள் உள்ளன. மற்ற இருவர் மீது எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. மேலும், இவர்கள் நால்வருக்கும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான முடிவுகள் ‘நெகட்டிவ்’ (Negative) என வந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்த வழக்கு, வீட்டை உடைத்துத் திருடுவதற்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 457-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.