பாலிக் பூலாவ்:
பினாங்கில் இயங்கி வந்த ஒரு மிகப்பெரிய அனைத்துலக மெத்தாம்பேட்டமின் தயாரிப்பு கும்பலை மலேசியக் காவல்துறை முறியடித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் சுமார் 38 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 1.3 டன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வெற்றிகரமான நடவடிக்கை டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூட்டரசு போலீஸ் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) இயக்குனர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது 32 முதல் 38 வயதுக்குட்பட்ட மூன்று வெளிநாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 1.2 முதல் 1.3 டன் வரையிலான மெத்தாம்பேட்டமின் போதைப்பொருள் கண்டறியப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ஏறக்குறைய RM38 மில்லியன் ஆகும்.
கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பெரிய சர்வதேசக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், பினாங்கையே ஒரு முக்கியத் தயாரிப்பு மையமாகப் பயன்படுத்தி வந்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் போதைப்பொருட்கள் உள்நாட்டுச் சந்தைக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பினாங்கு வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் முறியடிப்பில் ஒன்றாக இது கருதப்படுகிறது.