Offline
Menu
கேபின் அழுத்தக் கோளாறு: ஏர்ஏசியா விமானம் கோத்தா கினபாலுவிற்குத் அவசரமாகத் திருப்பி விடப்பட்டது!
By Administrator
Published on 12/30/2025 09:00
News

கோலாலம்பூரிலிருந்து புருணை நோக்கிப் பயணம் செய்த ஏர்ஏசியா விமானம், கேபின் அழுத்தத்தில் (Cabin Pressure) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோத்தா கினபாலுவிற்குத் திருப்பி விடப்பட்டது.

ஏர்ஏசியா நிறுவனத்தின் AK278 என்ற விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து (KLIA) புருணை நோக்கிப் புறப்பட்டது.

 

பயணத்தின் போது விமானத்தின் கேபின் அழுத்தத்தில் மாற்றம் இருப்பதை ஓட்டுநர்கள் கண்டறிந்தனர். பாதுகாப்பு கருதி, விமானம் உடனடியாகக் கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.

 

இந்நிலையில் விமானம் கோத்தா கினபாலுவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏர்ஏசியா ஊழியர்கள் உதவி வழங்கினர். பின்னர் இரவு 8.08 மணியளவில் மற்றொரு மாற்று விமானம் மூலம் பயணிகள் புருணைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டவுடன், விமானிகள் முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட்டனர், என்றும், “ஆண்டு இறுதிப் பயணத் திட்டங்களில் இருக்கும் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். பயணிகளின் பாதுகாப்பிற்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்,” என்றும், ஏர்ஏசியா மலேசியா தலைமை நிர்வாக அதிகாரி ஃபாரே மஸ்புத்ரா (Fareh Mazputra) கூறினார்.

 

தற்போது அந்த விமானம் தொழில்நுட்பப் பரிசோதனை மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விமானத்தின் பயணப் பாதையைக் காட்டும் வரைபடம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

Comments