மலேசியாவின் மிக முக்கியமான கலாச்சாரத் திருவிழாவான தைப்பூசத்திற்கு பத்துமலை முருகன் ஆலயம் மிக பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படும் நிலையில், சுமார் 2.5 மில்லியன் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பத்துமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோலாலம்பூர் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பக்தர்களின் பயண வசதிக்காக கேடிஎம் (KTM) கொமுட்டர் ரயில் சேவை ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2 வரை 24 மணிநேரமும் இடைவிடாமல் இயங்கும் என போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், கோலாலம்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பத்துமலைக்குச் சிறப்புப் பேருந்து சேவைகளும் இயக்கப்பட உள்ளன. பத்துமலைக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சகம் சார்பில் அவசர மருத்துவ முகாம்கள் பத்துமலையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன. 600-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் மற்றும் காவடி எடுப்பவர்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வழிபட அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.