நாளை (ஜன. 30) தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்து மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 23 முக்கிய சாலைகள் மூடப்படுவதாக மலேசியக் காவல்துறை அறிவித்துள்ளது. இதையொட்டி KTM நிறுவனம் 4 நாட்களுக்கு 24 மணி நேரமும் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
குறிப்பாக ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் கிள்ளான் பள்ளத்தாக்கு (Klang Valley) முழுவதும் KTM கொமுட்டர் பயணம் முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வருவதைத் தவிர்த்து ரயிலைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து இன்று இரவு புறப்படும் 'வெள்ளி ரதம்' பத்து மலையை நோக்கிச் செல்லும்போது பாதுகாப்புக்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரத ஊர்வலப் பாதையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.