பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் தனது பந்துவீச்சு முறையினால் (Bowling Action) தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு உதவிய தாரிக், கைகளைச் சுழற்றும் விதம் விதிகளுக்குப் புறம்பாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், அவர் மீதான புகார் குறித்து ஐசிசி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தடையும் விதிக்கவில்லை.
இதற்கிடையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான மகா யுத்தத்திற்கு முன்னதாக தாரிக் ஒரு பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார். தனது பந்துவீச்சு முறையை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது கடினம் என்றும், அது அவர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது. கடந்த சில போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராகச் சற்றுத் திணறியுள்ள நிலையில், தாரிக் போன்ற மர்ம சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய அணி தனித்துவமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.