வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் புரட்சி மற்றும் ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, சுமார் 18 மாத கால இடைக்கால ஆட்சி முடிவுக்கு வந்து இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 12.7 கோடி வாக்காளர்கள் தங்களது புதிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், முக்கியப் போட்டி வங்கதேச தேசியவாத கட்சி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய அணிகளுக்கு இடையே நிலவுகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதாக பிஎன்பி (BNP) குற்றம் சாட்டியுள்ளது. சில இடங்களில் சிறிய அளவிலான மோதல்கள் பதிவாகியுள்ளன.
இந்தத் தேர்தலின் முடிவுகள் வங்கதேசத்தின் எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அண்டை நாடான இந்தியாவுடனான உறவைத் தீர்மானிப்பதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தேர்தல் முடிவுகள் நாளை (பிப்ரவரி 13) காலைக்குள் முழுமையாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.