Offline
Menu
மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கை : கோலாலம்பூரில் 110 வாகனங்கள் பறிமுதல்!
By Administrator
Published on 02/15/2026 17:35
News

நகரின் அமைதியைக் குலைக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் (Exhausts) மற்றும் சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட சோதனையில் 110 வாகனங்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

“கோலாலம்பூர் மாநகரம் நெருக்கமான மற்றும் உயரமான கட்டிடங்களைக் கொண்டது. மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களுடன் வாகனங்கள் அதிவேகமாகச் செல்லும்போது, அந்தச் சத்தம் கட்டிடங்களுக்கு இடையே எதிரொலித்து பொதுமக்களுக்குப் பெரும் தொந்தரவாக மாறுகிறது” என்று, கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க மற்றும் விசாரணைப் பிரிவுத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் முகமட் ஜம்சூரி முகமட் ஈசா கூறினார்.

நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த ஒருங்கிணைந்த சோதனையில்

70 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 40 மாற்றியமைக்கப்பட்ட கார்கள் என மொத்தம் 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் விதிமுறைக்கு மாறான சைலன்சர்கள், தவறான பதிவு எண்கள் (Number plates) மற்றும் பழுதான பிரேக் சிஸ்டம் போன்ற குற்றங்களுக்காக 720 வாகனங்களுக்கு அபராதங்கள் (Summons)விதிக்கப்பட்டன.

இந்நிலையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு துறையுடன் (AADK) இணைந்து நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா மற்றும் மெத்தாம்பேட்டமைன் பயன்படுத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சோதனையில் போக்குவரத்துப் போலீசார் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் துறை (DOE), சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மற்றும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமை (AADK) ஆகியவற்றைச் சேர்ந்த 100 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

சாலை விதிகளை மதித்து நடப்பதன் மூலமே விபத்துகளைத் தவிர்த்து, அனைவரும் பாதுகாப்பாகத் தங்கள் இலக்கை அடைய முடியும் என ஜம்சூரி வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினார்.

Comments