ஷா ஆலமில் ‘சிக்கு சந்திரா’ என அழைக்கப்படும் நபருக்குச் சொந்தமான மூன்று கார்கள், அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று, சுயேச்சை மதப்போதகர் ஃபிர்தௌஸ் வோங் (Firdaus Wong) தனது சமூக வலைதளப் பக்கத்தில் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முகமூடி அணிந்த ஒரு கும்பல், அரிவாள்களுடன் (Machetes) வந்து சிக்கு சந்திராவைத் தாக்க முயன்றதோடு, அவரது மூன்று கார்களுக்கும் தீ வைத்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாகப் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, பூச்சோங்கில் (Puchong) உள்ள சிக்கு சந்திராவின் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் காரின் கண்ணாடிகளை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்புதான் மற்றொரு மதப்போதகர் சம்ரி வினோத் (Zamri Vinoth) ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இப்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
“சட்டம் ஒழுங்கு உள்ள இந்த நாட்டில் இது போன்ற தீவிரவாதச் செயல்களை அனுமதிக்க முடியாது. இன மற்றும் மதவாதத்தை தூண்டுபவர்கள் மற்றும் தீவிரவாதிகள் மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என ஃபிர்தௌஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.