எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பாபி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கே.வி.என் (KVN) நிறுவனம் சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்து, மலேசியாவில் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இருப்பினும், கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், இன்னும் சென்சார் (Sensor) சான்றிதழ் பெற முடியாமல் முடங்கியுள்ளது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதால், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றிருந்த அமேசான் பிரைம் (Amazon Prime) நிறுவனம் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 120 கோடி ரூபாய் கொடுத்து இப்படத்தை வாங்கப் போட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்சார் பிரச்சனைகளால் படம் எப்போது வெளியாகும் என்ற தெளிவு இல்லாததே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இது தயாரிப்பு தரப்பிற்குப் பொருளாதார ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் படங்கள் வழக்கமாகப் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை ஈட்டும் என்பதால், இந்தப் படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சட்ட மற்றும் சென்சார் சிக்கல்கள் படத்தின் ரிலீஸையே கேள்விக்குறியாக்கியுள்ளன. இருப்பினும், படக்குழுவினர் இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்து படத்தை விரைவில் திரைக்குக் கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக இந்தப் படம் வெளியாகுமா என்பதே இப்போது கோலிவுட்டின் மிகப்பெரிய விவாதமாக உள்ளது.