Offline
Menu
கொரோனா காலத்தை போல நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்
By Administrator
Published on 03/28/2026 09:00
News

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா விடுத்த போர் நிறுத்த அழைப்பை ஈரான் ஏற்க மறுத்து வருகிறது. இஸ்ரேலும் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர தணிந்தபாடில்லை. ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியிருப்பதால், உலக நாடுகள் எரிபொருள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது எரிவாயு தட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட இருப்பதாகவும், கொரோனா காலத்தில் விதிக்கப்பட்டது போல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன.அதேபோல், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று கருதி வாகன ஓட்டிகள் அதிக அளவில் பெட்ரோல் பங்குகளில் குவியும் நிலையும் உள்ளது.இது நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் விதமாக உள்ள நிலையில், லாக்டவுன் போடப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.இதில் அவர் கூறியதாவது:“லாக்டவுன் போடப்படும் என்று பரவும் வதந்திகள் முற்றிலும் தவறானவை. மத்திய அரசிடம் இதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். தற்போதைய சூழலில் பொறுமையுடனும், பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் இருப்பது அவசியம். எரிபொருள் விநியோகம் தடைபடாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மோடி அரசு எடுத்துள்ளது. சவாலான சூழலை எதிர்கொள்ள நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Comments