ஈரானில் உள்ள பல்கலைக்கழகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானியப் புரட்சிப் படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதில் கட்டடங்கள் பலத்த சேதமடைந்தாலும், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தகர்க்கப்பட்டதற்குப் பழிவாங்கப் போவதாக அறிவித்துள்ள ஈரானியப் புரட்சிப் படை, அமெரிக்காவிற்கு ஒரு காலக்கெடுவை விதித்துள்ளது: ஈரானியப் பல்கலைக்கழகங்கள் மீதான குண்டுவீச்சை அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாகக் கண்டிக்க வேண்டும். நாளை மார்ச் 30, திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குள் (தெஹ்ரான் நேரம்) இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
தாக்குதல் அபாயம் உள்ளதால், மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனடியாக அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக வளாகங்களில் இருந்து குறைந்தது ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்குமாறு பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளாகும் நிறுவனங்கள்
வளைகுடா நாடுகளில் பல புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக: கத்தாரின் டெக்சஸ் A&M பல்கலைக்கழகம் (Texas A&M University). மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள நியூயார்க் பல்கலைக்கழகம் (New York University) என்பன அடங்கும்.
ஈரானின் இந்த நேரடி மிரட்டலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பும், பாதுகாப்பு அச்சமும் நிலவுகிறது.