மலாக்காவில் நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் போதிய மழையின்மை காரணமாக, மாநிலத்தின் மூன்று முக்கிய அணைகளிலும் நீர்மட்டம் 10 முதல் 30 விழுக்காடு வரை குறைந்துள்ளது. இருப்பினும், வரும் ஏப்ரல் மாதம் வரை நீர் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது என மாநில அரசு உறுதியளித்துள்ளது.
அணைகளின் தற்போதைய நிலை குறித்து மாநில பொதுப்பணி, உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் குழுவின் தலைவர் டத்தோ ஹமீட் மைதீன் குஞ்சு பஷீர் (Datuk Hameed Mytheen Kunju Basheer) இகூறுகையில்,
தூரியான் துங்கல் அணை (Durian Tunggal Dam): சுமார் 70% நீர் இருப்பு உள்ளது.
ஜுஸ் அணை (Jus Dam): சுமார் 60% நீர் இருப்பு உள்ளது.
அசாஹான் அணை (Asahan Dam): சுமார் 90% நீர் இருப்பு உள்ளது.
தற்போது நீர்மட்டம் குறைந்திருந்தாலும், அவை இன்னும் சாதாரண அளவிலேயே (Normal range) இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே நீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க மலாக்கா நீர் வாரியம் (SAMB) பல்வேறு மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது, அத்தோடு ஜோகூரில் உள்ள சுங்கை கெரிசிக்கிலிருந்து (Sungai Gerisik) மெர்லிமாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
மேலும் அவசரத் தேவையின் போது அணைகளுக்குத் தண்ணீர் வழங்க மாநிலம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கக் குளங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (MetMalaysia) கணிப்புப்படி, மேற்கு கடற்கரையின் உள்பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்மட்டத்தை உயர்த்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரை வறண்ட வானிலை நீடிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.