Offline
Menu
ஜாலான் துன் ரசாக்கில் லோரி – சுற்றுலா வேன் மோதியதில் 8 பேர் படுகாயம்!
By Administrator
Published on 04/20/2026 16:00
News

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தேசிய நூலகத்திற்கு அருகே இன்று மாலை ஒரு லோரியும் சுற்றுலா வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.

இன்று மாலை சுமார் 4:04 மணியளவில் இந்த விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததாகக் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. தித்திவாங்சா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் 4:14 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் லோரியின் 56 வயது ஓட்டுநருக்குக் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் இருந்த 46 வயது உதவியாளருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் சுற்றுலா வேனில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 15 பேர் இருந்தனர். அவர்களில் 6 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. மற்ற 9 பயணிகள் எவ்விதக் காயமுமின்றி தப்பினர்.

காயமடைந்த 8 பேருக்கும் சம்பவ இடத்திலேயே சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காகக் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு (HKL) கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக ஜாலான் துன் ரசாக் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments