சிலாங்கூர், சிப்பாங் பகுதியில் இயங்கி வந்த பிரபல கையுறை தயாரிப்பு நிறுவனமான WRP Asia Pacific Sdn. Bhd. இந்த மாத தொடக்கத்தில் மூடப்பட்டதை அடுத்து, 304 மலேசியர்கள் உட்பட மொத்தம் 1,426 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து தீபகற்ப மலேசியா தொழிலாளர் துறை (JTKSM) தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் பின்வரும் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன:
குறித்த நிறுவனம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் வகையில் தொழிலாளர்களுக்குப் பணிநீக்க நோட்டீஸ்களை வழங்கியுள்ளது.மேலும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தொழிலாளர் துறை, சொக்சோ (SOCSO) மற்றும் காவல்துறையினருடன் இணைந்து கலந்தாலோசனை நடத்தியுள்ளது.
2026 மார்ச் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதற்கான ஆவணப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பணிநீக்கப் பலன்கள் மற்றும் இதர ஊதியக் கோரிக்கைகள், உரிய நடைமுறைகளின்படி ‘Proof of Debt’ படிவங்கள் மூலம் கையாளப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆவண மேலாண்மை மற்றும் இயந்திரப் பராமரிப்பு போன்ற முக்கியப் பணிகளுக்காகச் சில உள்ளூர் தொழிலாளர்களுக்குத் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுப் பணிகள் அல்லது அவர்கள் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படும் வரை, அவர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவுத் தேவைகளை நிறுவனம் தொடர்ந்து வழங்கும் எனத் தொழிலாளர் துறையிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், சட்டப்பூர்வமான சலுகைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யவும் மனிதவள அமைச்சு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.