Offline
Menu
மித்ராவின் 20 மில்லியன் ரிங்கிட் ‘தர்ம மடானி’ திட்டம் இந்தியச் சமூகத்திற்குப் புதிய உத்வேகம்
By Administrator
Published on 04/28/2026 15:00
News

இந்து ஆலயங்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை சமுதாயத்தின் கல்வி, கலாச்சாரம், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் ஆளுமைப் பண்புகளை வளர்க்கும் மையங்களாகவும் திகழ வேண்டும். இந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில், மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா (MITRA), நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்களுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் ‘தர்ம மடானி’ (Dharma MADANI) எனும் நிதியுதவித் திட்டத்தை மென்மேலும் வலுப்படுத்தி வருகிறது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மித்ராவின் தலைமை இயக்குனர் ரவீந்திரன் நாயர், இத்திட்டமானது வெறும் நிதிப் பங்கீடு மட்டுமல்ல; மாறாக இந்தியச் சமூகத்தின் அடித்தளத்தை அடிமட்ட அளவில் பலப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய முதலீடு என்று விளக்கினார். இந்தியச் சமூகத்தின் உயிர்நாடியே ஆலயங்கள்தான். அங்கிருந்துதான் நற்பண்புகள், ஒற்றுமை, கூரிய சிந்தனை பிறக்கின்றன. எனவே, ஆலய நிர்வாகங்கள் நமது இளம் தலைமுறையினருக்கு ஆன்மீகம், கலாச்சாரம், கல்வியைப் புகட்டும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

குறிப்பாக, தேவார வகுப்புகள், பரதநாட்டியம், சிலம்பம், கபடி போன்ற கலைப் பயிற்சிகளுடன், மாணவர்களுக்கான கூடுதல் கல்வி போதனை வகுப்புகள், தலைமைத்துவ முகாம்களை நடத்தும் மையங்களாக ஆலயங்கள் உருமாற வேண்டும்,” என அவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் தெரிவித்தார். மேலும், இந்த நிதியானது ஆலயங்களின் கட்டிட வளர்ச்சி அல்லது உள்கட்டமைப்பு பணிகளுக்கானது அல்ல என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மாறாக, ஆன்மீக, சமூக மேம்பாடு, வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள், கல்வி ஆதரவு ஆகியவற்றிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இந்த அணுகுமுறையானது, ஆலயங்களைச் சமூகப் பாதுகாப்பு, நல்வாழ்வை உறுதி செய்யும் புகலிடங்களாக மாற்றும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments