சென்னை: முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்நாராயணா, அப்படத்தின் ரிலீஸ் பற்றியும் பேசியிருக்கிறார். விஜய்யின் எதிர்பார்த்துதான் நாங்கள் 'ஜனநாயகன்' என்ற தலைப்பைப் படத்திற்கு வைத்தோம். இப்போது அவர் தமிழ்நாட்டின் 'ஜனநாயகன் ஆகிவிட்டார்' எனக் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் 2026 தகவல்களுக்கு ஒன்இந்தியா தமிழுடன் இணைந்திருங்கள் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வெற்றி பெற்ற நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய். பெரும்பான்மையை நிரூபிக்க பல போராட்டங்களைத் தாண்டி இன்று காலை தமிழக முதலமைச்சராகப் பதவியும் ஏற்றிருக்கிறார் விஜய்.
விஜய்யுடன் நெருக்கமாக சினிமாவில் பல காலம் பயணித்த அவருடைய நண்பர்கள் பலரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
சில நாட்களுக்கு முன்பு, விஜய் ஆளுநர் அர்லேகரை சந்திக்க செல்கையில், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவும் உடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது விமர்சனங்களுக்கு உள்ளானது.
விஜய் நடிப்பில் உருவான கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளிவைக்கப்பட்டது. மறுதணிக்கை மற்றும் தேர்தல் காரணங்கள் என தொடர்ந்து பல சிக்கல்கள் காரணமாக படம் வெளியாகவில்லை.
இதனிடையே, கடந்த மாதம் ஜனநாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்ற நிலையில் படத்தொகுப்பாளரிடம் பணியாற்றியவர் மூலம் படம் கசிந்தது தெரியவந்தது.