Offline
Menu
5-வது மாடியில் இருந்து விழுந்த 3 வயது சிறுவன் – உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையில் அனுமதி
By Administrator
Published on 05/16/2026 10:00
News

ஜோகூர் பாரு, பண்டார் உடா உத்தாமாவில் (Bandar Uda Utama) உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த மூன்று வயது சிறுவன், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வருகிறான்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10:30 மணியளவில் இந்த அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்ததாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“விசாரணையின் முதற்கட்ட தகவல்களின்படி, அச்சிறுவன் வீட்டின் வரவேற்பு அறையில் (Hall) இருந்த சோபாவின் மீது ஏறி விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த திறந்த ஜன்னல் வழியாக அவன் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது,” என்று, ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ராடின் ரம்லான் ராடின் தாஹா கூறினார்.

கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடப் பகுதியில் சிறுவன் மயக்க நிலையில் கிடப்பதைக் கண்டு மீட்புப் படையினர் விரைந்தனர். கீழே விழுந்த வேகத்தில் சிறுவனின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவனுக்கு உட்புற ரத்தக்கசிவு (Internal Bleeding) ஏற்பட்டுள்ளதால் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தற்போது அந்தச் சிறுவன் ஜோகூர் பாரு, சுல்தானா அமீனா மருத்துவமனையின் (HSA) தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர்கள், ஜன்னல் மற்றும் பால்கனி பகுதிகளில் குழந்தைககளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Comments