Offline
Menu
பத்து பாஹாட்டில் பெண்ணைச் சித்திரவதை செய்த கும்பல் தலைவன் கைது; துப்பாக்கி பறிமுதல்!
By Administrator
Published on 05/16/2026 13:00
News

கோலாலம்பூர்:

ஜோகூர், பத்து பாஹாட்டில் பெண் ஒருவரைக் கடத்தி, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்ததுடன், தீயால் சுட்டுக் கொடுமைப்படுத்திய கும்பலின் தலைவன் உட்பட இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பானாங் ஹைட்ஸ் பகுதியில் வைத்து இப்பெண் கடத்தப்பட்டார். அக்கும்பல் அந்தப் பெண்ணைக் கடுமையாகத் தாக்கியதுடன், அவரது கணுக்கால் பகுதியில் தீயால் காயப்படுத்திச் சித்திரவதை செய்துள்ளது. மேலும், அவரை நிர்வாணப் படம் எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த 32 வயதுடைய முக்கியச் சந்தேக நபர், கூலாய் பகுதியில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றார். அப்போது அவர் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் போலீசாரிடம் சிக்கினார். அவரிடமிருந்து ‘குளோக் 17’ (Glock 17) ரகத் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு ஏற்கனவே 12 குற்றப் பின்னணிகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பிடிபட்ட இருவரையும் ஆறு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் தொடர்புடைய மேலும் இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது இக்கும்பல் மீது கடத்தல், கொள்ளை, ஆயுதம் வைத்திருத்தல் மற்றும் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Comments