நாட்டின் தொழிலாளர் சந்தையை மறுவடிவமைக்கவும், திறன் பயிற்சியை மேம்படுத்தவும், கிக் (gig) பொருளாதாரத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கவும் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘பேஸ்’ (Pace) எனப்படும் தேசியத் திறனாளர் திட்டத்தை மனிதவள அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்துவதோடு, தரமான வேலைவாய்ப்புகளின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இந்தத் ‘திறன் மேம்பாடு மற்றும் தொழில் வாய்ப்பு முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் திட்டம் (PACE)’ உருவாக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET), இளைஞர் திறன் மேம்பாடு, டிஜிட்டல் பொருளாதார மாற்றம், உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் கிக் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது வெறும் பயிற்சித் திட்டம் மட்டுமல்ல, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் சார்ந்த பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், மிகவும் நெகிழ்வான மற்றும் அதிக திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஒரு பெரிய முதலீடு என்றும் அமைச்சர் ரமணன் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.