Offline
Menu
புதுக்கோட்டை தெற்கு, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்கள் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி
By Administrator
Published on 05/18/2026 12:00
News

சென்னை, சட்டசபை தேர்தல் தோல்வியால், அ.தி.மு.க.வில் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணி உருவாகி உள்ளது.

தேர்தல் தோல்விக்கு பின்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி மோதல் வெடித்தது. இதையடுத்து நடந்த சம்பவங்களால் அக்கட்சி இரண்டாக உடைந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு எதிராக, த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையிலான அணி முன்வந்தது. இதை அவர்கள் பகிரங்கமாக தெரிவித்தனர்.

சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் அ.தி.மு.க.வில் புயலை கிளப்பியதையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்பட 26 பேரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கியிருந்த நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.கே. வைரமுத்து, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி. கிருஷ்ண முரளி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments