Offline
Menu
தாய்லாந்தில் 440 கிலோ சியாபு போதைப்பொருள் பறிமுதல்: மேலும் 5 மலேசியர்கள் கைது!
By Administrator
Published on 05/18/2026 13:00
News

கோலாலம்பூர்:

தாய்லாந்தின் நகோன் பாத்தோம் (Nakhon Pathom) பகுதியில், சுமார் 20 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள 440 கிலோ ‘சியாபு’ (Syabu) வகை போதைப்பொருளைப் பறிமுதல் செய்த வழக்கில், மேலும் ஐந்து மலேசியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மே 14-ஆம் தேதி இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, கடந்த மே 5-ஆம் தேதி ஹாட் யாய் (Hat Yai) பகுதியில் 5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 102 கிலோ சியாபு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சோங்க்லா (Songkhla) மாநிலத்தின் பாடாங் பெசார் எல்லை வழியாக தாய்லாந்துக்குள் நுழையும் மலேசிய வாகனங்களை அந்நாட்டு போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

இந்தக் கண்காணிப்பின் பலனாக, நகோன் பாத்தோம் மாவட்டத்தின் முவாங் (Muang) பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த ஐந்து மலேசியர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் பயன்படுத்திய நான்கு வாகனங்களில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 440 கிலோ சியாபு போதைப்பொருள் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டது.

சர்வதேச அளவில் செயல்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இவர்களின் சொத்து மதிப்பு, நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் தாய்லாந்தில் இவர்களுக்கு உதவிய உள்ளூர் நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

Comments