நடிகர் சூர்யா மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டையாடி வருகிறது. பாக்ஸ் ஆபீஸ் இணையதளமான 'Sacnilk' தகவலின்படி, இப்படம் வெளியான 4 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 82.30 கோடி நெட் (Net) வசூலையும், உலகளவில் ரூ. 141.30 கோடிக்கும் அதிகமான கிராஸ் (Gross) வசூலையும் பெற்று ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
இப்படத்தின் நாள் வாரியான இந்திய வசூல் விவரம்: முதல் நாள் (வெள்ளி) ரூ. 15.50 கோடி, இரண்டாம் நாள் (சனி) ரூ. 24.15 கோடி, மூன்றாம் நாள் (ஞாயிறு) ரூ. 28.35 கோடி என வார இறுதியில் கல்லா கட்டியது. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையிலும் (4-வது நாள்) சரிவைச் சந்திக்காமல், இந்திய அளவில் ரூ. 14.30 கோடியை வசூலித்து 'திங்கட்கிழமை டெஸ்ட்டிலும்' படம் மிக வலுவாகத் தேறியுள்ளது. இதில் தமிழ் பதிப்பு மட்டும் 4-வது நாளில் ரூ. 12.10 கோடியும், தெலுங்கு பதிப்பு ரூ. 2.20 கோடியும் வசூலித்துக் கொடுத்துள்ளது.
வெளிநாட்டுச் சந்தையிலும் (Overseas) 'கருப்பு' திரைப்படம் பலத்த வரவேற்பைப் பெற்று 4 நாட்களில் ரூ. 46 கோடி கிராஸ் வசூலை எட்டியுள்ளது. சூர்யாவின் முந்தைய படங்களான கங்குவா (ரூ. 70.37 கோடி), எதற்கும் துணிந்தவன் (ரூ. 49.10 கோடி) ஆகியவற்றின் வாழ்நாள் வசூலை வெறும் 4 நாட்களில் முறியடித்து, சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய கம்பேக் படமாக 'கருப்பு' உருவெடுத்துள்ளது.