Offline
Menu

LATEST NEWS

போலி அடையாள அட்டை தயாரிக்கும் கும்பல் கூண்டோடு கைது!
By Administrator
Published on 05/21/2026 12:00
News

கோத்தா கினபாலு:

மலேசிய அடையாள அட்டை (MyKad) பெற்றுத் தருவதாகக் கூறி நடத்தப்பட்ட பண மோசடிப் புகாரை அடுத்து, சபாவில் போலி அடையாள அட்டைகளைத் தயாரித்து வந்த ஒரு பெரிய ரகசியக் கும்பலை போலீசார் அதிரடியாகக் கண்டுபிடித்து முறியடித்துள்ளனர்.

கடந்த மார்ச் 13-ஆம் தேதி 30 வயதுடைய பெண் ஒருவர் போலீசில் ஒரு புகார் அளித்தார். தனக்கு மலேசிய அடையாள அட்டை (MyKad) பெற்றுத் தருவதாகக் கூறி சிலர் 20,000 ரிங்கிட்டை ஏமாற்றிவிட்டதாகவும், தேசியப் பதிவுத் துறையின் (NRD) தரவுத்தளத்தில் (Database) தனது விண்ணப்பம் குறித்து எந்தவொரு விவரமும் இல்லை என்றும் அவர் கூறியதாக, இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சபா மாநில காவல்துறைத் தலைவர் (Police Commissioner) டத்தோ ஜவ்தே திகுன் கூறினார்.

அந்தப்பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, சபா போலீசார் உடனடியாக ‘ஓப்ஸ் புகோ’ (Ops Pugo) என்ற சிறப்பு அதிரடி வேட்டையைத் தொடங்கினர். இந்த விசாரணைதான் ஒரு பெரிய போலி அடையாள அட்டை கும்பலை நோக்கி போலீசாரை வழிநடத்தியது.

கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கி 6 நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில், 36 முதல் 61 வயதுக்குட்பட்ட 9 சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் ஐந்து பேர் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கும்பலிடமிருந்து போலி அடையாள அட்டை தயாரிப்பதற்கான ஏராளமான ஆவணங்கள் மற்றும் உபகரணங்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றில் மலேசிய அடையாள அட்டை (MyKad) விண்ணப்பப் படிவங்கள், விண்ணப்பதாரர்களின் அடையாள ஆவண நகல்கள் மற்றும் புகைப்படங்கள்,

அசல் மற்றும் போலி பிறப்புச் சான்றிதழ்கள் (Birth Certificates), கடவுச்சீட்டு (Passport) நகல்கள் மற்றும் போலி அடையாள அட்டைகள், தேசியப் பதிவுத் துறையின் (NRD) போலி முத்திரைகள் (Stamps) என்பன அடங்கும்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது தண்டனைச் சட்டம் மற்றும் 1990 தேசியப் பதிவு விதிகளின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்குக் கடுமையான சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு சட்டவிரோதச் செயல்களிலும் போலீசார் எப்போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள் என்று டத்தோ ஜவ்தே திகுன் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். மேலும், இது போன்ற போலி ஆவணத் தயாரிப்புகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Comments