Offline
Menu
பெட்ரோனாஸ் FSO செப்பாட் தளத்தில் விபத்து: 3 ஒப்பந்த ஊழியர்கள் பலி, ஒருவர் காயம்
By Administrator
Published on 05/26/2026 09:00
News

கோலாலம்பூர்:

திரெங்கானு கடற்பகுதியில் உள்ள செப்பாட் எண்ணெய் வயலின் ‘எஃப்எஸ்ஓ செப்பாட்’ (FSO Sepat) மிதவை உற்பத்தி மற்றும் சேமிப்புத் தளத்தில் நேரிட்ட விபத்தில் மூன்று ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்பதை பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்து நேற்று பிற்பகல் 12.50 மணியளவில், அங்குள்ள மீட்புப் படகில் (Lifeboat) பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது நிகழ்ந்ததாக பெட்ரோனாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“விபத்தில் சிக்கிய மூன்று ஊழியர்களும் நேற்று மாலை சுமார் 5.57 மணியளவில் கோலா திரெங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். காயமடைந்த மற்றொரு ஊழியர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பெட்ரோனாஸ் தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்நிறுவனம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதே தங்களின் தற்போதைய முக்கிய முன்னுரிமை என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

Comments