Offline
Menu
தைப்பிங் சிறை விவகாரம்; அமைச்சரவையில் கேள்வி எழுப்புவேன் – கோபிந்த்
By Administrator
Published on 05/27/2026 12:00
News

தைப்பிங் சிறையில் ஒரு கைதி தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. சுஹாகாமின் பொது விசாரணையில் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் அடிப்படை மனித உரிமைகள், கண்ணியம் ஆகியவை அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றன என்று ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ கூறினார். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களுக்கு ஐஜிபி, அட்டர்னி ஜெனரல் (ஏஜி) ஆகியோர் தெளிவான பதிலளிக்க வேண்டும் என்று டிஜிட்டல்துறை அமைச்சருமான அவர் கேட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் இச்சம்பவம் தொடர்பில் எத்தனை போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கான் சிங் ஹெங் என்ற அந்தக் கைதிக்குத் திட்டமிட்டு கும்பலாக உடல் ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை சுஹாகாம் அதன் விசாரணையில் கண்டறிந்திருக்கிறது. இக்கைதியின் மரணம் தொடர்பில் சிறை வார்டன் ரிண்டி ஓனெல் விக்டர் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. மாறாக கடந்த டிசம்பர் மாதம் குற்றவியல் சட்டம் பிரிவு 304 கீழ் நோக்கமில்லா கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. அந்தக் குற்றச்சாட்டை மறுத்த அவர் விசாரணை கோரியிருக்கிறார். தவறு செய்பவர்களைத் தடுத்து வைக்கும் அதிகாரம் பெற்றவர்கள் அந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதையும் அதன் விளைவாக உயிர்கள் பறிக்கப்படுவதையும் சட்டம் எப்படிப் பார்க்கிறதோ அதே பார்வை அதற்கு எதிரான நடவடிக்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்று கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

மருத்துவச் சிகிச்சை அலட்சியம், மருத்துவப் பதிவேடுகளைத் தவறாகப் பதிவு செய்தல் போன்ற பிரச்சினைகளும் உற்றுக் கவனிக்கப்பட வேண்டும் என்று டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் கேட்டுக் கொண்டார். வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்போவதாகவும் அவர் சொன்னார் 2025 ஜனவரி மாதம் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் கிட்டத்தட்ட 100 பேர் காயமுற்றனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட தைப்பிங் சிறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சுஹாகாம் நேற்று அறைகூவல் விடுத்திருந்தது.

இச்சம்பவம் தொடாபான தனது பொது விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், முறைகேடு நடந்ததற்கான தெளிவான நேரடி ஆதாரங்களை வழங்கி இருப்பதாகவும் சுஹாகாம் தெரிவித்திருக்கிறது. ஒரு சிறை அதிகாரி மீது நோக்கமில்லா கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதை அடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற அதிகாரிகள் மீதும் குற்றவியல் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என்று மேல முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் சுஹாகாம தலைவருமான ஹிஷாமுடின் யூனுஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

கைதிகளுக்கு எதிராக சிறை அதிகாரிகள் அளித்த போலீஸ் அறிக்கைகளில் பொய்யான குற்றச்சாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உட்பட சுஹாகாமின் கண்டுபிடிப்புகள் கண்டனத்திறகுரியதாகவும் வெடகக்கேடானதாகவும் இருப்பதாகக் கூறிய கெப்போங் பக்காத்தான் ஹராப்பான நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் தைப்பிங் சிறைச்சாலை உயர் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Comments