Offline
Menu
பிரதமர் மோடியுடனான சந்திப்பு நிறைவு; தமிழ்நாடு இல்லம் திரும்பினார் முதல்-அமைச்சர் விஜய்
By Administrator
Published on 05/29/2026 08:00
News

புதுடெல்லி/சென்னை தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் முழு ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து விஜய் முதல்-அமைச்சராகி உள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையையும் நிரூபித்து இருக்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் இன்று தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முதல்-அமைச்சரான பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று சேர்ந்த அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழ்நாடு இல்லத்தில் இருந்து மாலை 4.10 மணியளவில் முதல்-அமைச்சர் விஜய் புறப்பட்டார். பிரதமர் மோடியுடனான முதல்-அமைச்சர் விஜய்யின் சந்திப்பு, புதிதாக கட்டப்பட்ட பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், பிரதமர் மோடியுடனான முதல்-அமைச்சர் விஜய்யின் சந்திப்பு நிறைவடைந்து உள்ளது. இதன்பின்னர் முதல்-அமைச்சர் விஜய்யுடன் தமிழ்நாடு இல்ல ஊழியர்கள் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர். இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு அவர் திரும்பினார்.

தமிழகம் சார்பில் மனு

பிரதமர் மோடியை சந்தித்தபோது தமிழகம் சார்பாக சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார். நீட் தேர்வு, தமிழக மீனவர் கைது, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அவர் மனு அளித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றது. இதன்பின்னர் மாலை 6.30 மணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இரவு 7.30 மணிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

இந்த பயணத்தின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவையும், மந்திய மந்திரிகளையும் சந்திக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி எம்.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிற முக்கிய தலைவர்களை நாளை சந்தித்து பேச உள்ளார். இதன்பின்பு முதல்-அமைச்சர் விஜய் நாளை சென்னை திரும்புகிறார்.

Comments