Offline
Menu
கலைத்துறையில் 60 ஆண்டுகால சகாப்தம்: 5 தலைமுறை நாட்டிய மாணவர்களை பயிற்றுவித்த பெருமையைக் கொண்டிருக்கிறார் ‘நட்டுவ திலகம்’ இந்திரா மாணிக்கம்
By Administrator
Published on 05/29/2026 10:00
News

மலேசியாவின் கலை, பண்பாட்டுத் துறையில் கடந்த அறுபது ஆண்டுகளாகத் தடம் பதித்து வரும் ‘தஞ்சை கமலா இந்திரா பாரதநாட்டிய வித்யாலயா’, தனது வைர விழாவைக் கொண்டாடுகிறது. இந்தச் சிறப்புமிக்க தருணத்தில், அதன் தோற்றுநர் ‘நட்டுவ திலகம்’ திருமதி. இந்திரா மாணிக்கம் அவர்களை நேரில் சந்தித்து உரையாடியதில் மக்கள் ஓசை பெருமை கொள்கிறது. 5 தலைமுறைகளாக எண்ணிலடங்கா மாணவர்கள், நடன ஆசிரியர்களை உருவாக்கியுள்ள இவர இதுவரை 1000-க்கும் மேற்பட்ட சலங்கை பூஜைகளையும், அரங்கேற்றங்களையும் வெற்றிகரமாக முன்னின்று நடத்தியுள்ளார். ‘நட்டுவ திலகம்’, ‘நாட்டிய திலகம்’, ‘கலைமாமணி’, ‘வாழ்நாள் சாதனையாளர்’ (பலமுறை), ‘கலைச்செம்மல்’, ‘இந்தியன் ஐகான் பெண்மணி’, கூட்டரசு பிரதேசத்தின் ‘தொக்கோ வணித்தா’ போன்ற பல உயரிய விருதுகளை வென்று, மலேசிய இந்தியக் கலைத்துறையின் அடையாளமாகப் பரிணமிக்கிறார் இந்திரா மாணிக்கம்.

அயராத உழைப்பின் அடையாளம்

1966-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நடனப் பள்ளி, மலேசிய இந்தியக் கலை உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்திருப்பதற்கு, அதன் நிறுவனர் இந்திரா மாணிக்கம் அவர்களின் அயராத உழைப்பும், கலை மீதான தீராத பற்றுமே முக்கியக் காரணம். இரண்டு வயதிலேயே நடனக்கலையில் காலடி பதித்து, தஞ்சை பிச்சையா பிள்ளை பாரதநாட்டிய வித்யாலயாவில் முறையாகப் பயிற்சி பெற்று, இன்று பெரும் ஆளுமையாகத் திகழ்கிறார்.

கலை ஒரு சமூகக் கருவி

கலைப் பயணத்தைத் தாண்டி, சமூக மாற்றத்திற்காகவும், மாணவர்களின் நற்பண்பு உருவாக்கத்திற்காகவும் தாம் முன்னெடுத்துள்ள பணிகளை அவர் விவரித்தது வியப்பை அளிக்கிறது. நவீன தொழில்நுட்பம், தொடர்பு சாதனங்கள் குறைவாக இருந்த காலக்கட்டத்திலும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து, பல சவால்களுக்கிடையில் மலேசியாவில் நாட்டியக் கலையை பரவச்செய்துள்ளார் “கலைப்பயணத்தை வெறும் பொழுதுபோக்காகப் பார்க்காமல், சமூக சேவைக்கான கருவியாகப் பார்க்க வேண்டும். அந்தப் பார்வையை மாற்றிய பெருமை எங்கள் வித்யாலயாவைச் சாரும்” என்பதை இந்திரா மாணிக்கம் பெருமையுடன் குறிப்பிட்டார்.

சைவ சித்தாந்த மன்றம், ஆதரவற்றோர் இல்லங்கள், கல்வி நிதி திரட்டல் ஆகியவற்றிற்காக ‘சிவகௌரி’, ‘சிவகாமியின் சபதம்’, ‘கண்ணகி’, ‘ராமாயணம்’ போன்ற பிரம்மாண்டமான நாட்டிய நாடகங்களை அவர் அரங்கேற்றியுள்ளார். கலையின் வழியாகப் பண்பாட்டு விழுமியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததை அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். குறிப்பாக, 1991-ஆம் ஆண்டில் சென்னை, கோலாலம்பூர், பினாங்கு, ஈப்போ ஆகிய இடங்களில் அரங்கேற்றப்பட்ட ‘சிவகாமியின் சபதம்’, தம்முடைய கலைத் திறனுக்குச் சான்றாக இன்றும் பேசப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த நாடகம் ‘இஸ்தானா புடாயாவில்’ அரங்கேற்றப்பட்ட முதல் தமிழ் நாட்டியமாகவும் திகழ்ந்தது. அதே அரங்கில் கண்ணகி நாட்டிய நாடகம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், சிறுநீரக அறவாரிய நிதி திரட்டுக்காக சிவிக் சென்டரில், சிண்ட்ரேலா நாடகத்தை (ஆங்கில நாடகம்) தமிழில் படைத்தது போன்ற சிறப்புகளையும் பகிர்ந்தார் இந்திரா.

Comments