Offline
Menu
சென்னையில் அதிர்ச்சி: மதுபானக் கூட தகராறில் கார் ஏற்றி இளம் பெண் படுகொலை; 6 பேர் கைது!
By Administrator
Published on 06/01/2026 08:00
News

சென்னை கோயம்பேடு அருகே உள்ள மதுபானக் கூடம் (Bar) ஒன்றில் ஏற்பட்ட திடீர் கைகலப்பு, 18 வயது இளம் பெண் ஒருவரின் கோர மரணத்தில் முடிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய, அரசியல் கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த 6 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

விடுமுறை நாளை முன்னிட்டு அந்த மதுபானக் கூடத்தில் நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டு, அது மோதலாக வெடித்தது.

மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்ட 18 வயது யான்சி என்ற பெண் மற்றும் பாலகுரு என்ற ஆடவர் உள்ளிட்ட இரு தரப்பினரையும் அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றினர்.

இதனால் ஆத்திரமடைந்த யான்சி, மதுபானக் கூடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பாலகுருவின் கார் மீது கல் வீசித் தாக்கியுள்ளார். பின்னர், மற்றொரு 17 வயது பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடினார்.

இதனால் கோபமடைந்த பாலகுரு மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் இருந்த கார், யான்சி சென்ற மோட்டார் சைக்கிளை அதிவேகமாகத் துரத்தியுள்ளது.

கோயம்பேடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியதில், யான்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற 17 வயது சிறுமி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

உயிரிழந்த யான்சி, இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் என்று தெரியவந்துள்ளது. கைதானவர்கள்காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சுமன் சக்திவேல் மற்றும் பாலகுரு உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய சுமன் சக்திவேல் ஓட்டிய காரில் அரசியல் கட்சிக் கொடி கட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக 17 வயது சிறுமியை மதுபானக் கூடத்திற்குள் அனுமதித்தது தொடர்பாக, அதன் நிர்வாகம் மற்றும் உரிமையாளர் மீதும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, திட்டமிட்டுக் காரை ஏற்றிப் படுகொலை செய்த கோணத்தில் கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments