Offline
Menu
9 மில்லியன் சந்தாதாரர்களுக்கு 24 மணி நேர சொக்சோ பாதுகாப்பு இன்று முதல் அமல்
By Administrator
Published on 06/02/2026 08:00
News

மலேசியாவில் உள்ள 9 மில்லியனுக்கும் அதிகமான சொக்சோ சந்தாதாரர்களுக்கு, வேலை நேரத்தைத் தாண்டியும் 24 மணி நேரமும் முழுமையான விபத்து பாதுகாப்பு அளிக்கும் புதிய ‘லிண்டுங் 24 ஜாம்’ (LINDUNG 24 Jam) திட்டம் இன்று (ஜூன் 1) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், பொது விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நேரங்களிலும் தொழிலாளர்களுக்கு விரிவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பணியில் இருக்கும் அனைத்து முறைசார் தொழிலாளர்களுக்கும் இந்த பாதுகாப்பு தானாகவே நடைமுறைக்கு வரும் என்பதால், முதலாளிகளோ அல்லது தொழிலாளர்களோ இதற்கு புதியப் பதிவு எதையும் செய்ய வேண்டியதில்லை. எனினும், ஜூன் 1, 2026-க்குப் பிறகு புதிதாக வேலைக்குச் சேருபவர்களை முதலாளிகள் வழக்கம் போல் சொக்சோ அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த ‘லிண்டுங் 24 ஜாம்’ திட்டத்திற்கான சந்தாத் தொகையை தொழிலாளர்களே முழுமையாக ஏற்கும் வேளையில், இது 6,000 ரிங்கிட் சம்பள உச்சவரம்புக்கு உட்பட்டு, தற்போதைய மாதச் சம்பளத்தில் 0.75 விழுக்காடு என்ற ஆரம்ப விகிதத்தில் கணக்கிடப்படும். தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இந்தத் தொகையைக் கழித்து, மாதாந்திரச் சந்தாவாகச் செலுத்தும் பொறுப்பை முதலாளிகள் ஏற்பார்கள். இத்திட்டத்தின் கீழ் மருத்துவ நலன்கள், தற்காலிக மற்றும் நிரந்தர ஊனமுற்றோருக்கான பலன்கள், சார்ந்திருப்பவர்களுக்கான பலன்கள், மரணச் சடங்கு உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை உட்பட மொத்தம் 8 முக்கியப் பலன்களை சொக்சோ வழங்குகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) பரிந்துரைகளுக்கு இணங்கவும், மலேசியா மடானி கோட்பாட்டின் கீழ் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்தவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான பலன்களைப் பெற விரும்புவோர் https://lindungfaedah.perkeso.gov.my/ என்ற இணையப்பக்கம் வழியாகவோ அல்லது அருகிலுள்ள சொக்சோ அலுவலகம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

 

Comments