Offline
Menu

LATEST NEWS

அமெரிக்கா: குடும்ப சண்டையில் 6 பேர் படுகொலை; குற்றவாளியும் தற்கொலை
By Administrator
Published on 06/04/2026 08:00
News

நியூயார்க் அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மஸ்கடின் என்ற பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் 6 பேரை நபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்துள்ளார். குடும்ப தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இதில், தகவல் அறிந்து போலீசார் வீடு ஒன்றிற்கு சென்றனர்.

அப்போது, 4 பேர் துப்பாக்கி சூட்டில் படுகாயங்களுடன் கிடந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மரணம் அடைந்து விட்டனர் என பின்னர் தெரிய வந்தது. அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியவரின் உறவினர்கள் என நம்பப்படுகிறது. ரியான் வில்லிஸ் மெக்பார்லேண்ட் (வயது 52) என்பவர் இந்த துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.

போலீசார் வருவதற்கு முன்பே அந்த வீட்டில் இருந்து அவர் தப்பி விட்டார். இதேபோன்று மற்றொரு வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயத்துடன் மற்றொரு ஆண் மற்றும் அலுவலகம் ஒன்றில் இன்னொரு ஆணும் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து உயிரிழந்து கிடந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரை தேடி சென்றபோது, பாலம் ஒன்றின் அருகே மெக்பார்லேண்ட் கிடந்துள்ளார்.

அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். அவருக்கு கடந்த காலத்தில் குற்ற சம்பவத்துடன் தொடர்பு உள்ளது என தெரிவித்த மஸ்கடின் நகர காவல் துறை தலைவர் அந்தோணி கீஸ், இதுபற்றிய வேறு தகவல்கள் அறிந்த நபர்கள், போலீசாரை தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கவும் என கேட்டு கொண்டார்.

Comments