மலேசியர்கள் தங்களது அரசின் அதிகாரப்பூர்வ MyGOV செயலி (App) மூலமாகவே எதிர்வரும் 2026 ஃபிஃபா (FIFA) உலகக்கிண்ணக் கால்பந்து போட்டிகளை நேரடியாகக் கண்டுகளிக்கலாம் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, மலேசிய அரசாங்கத்தின் MyDigital ID இல் பதிவு செய்துள்ள பயனர்கள் அனைவரும், MyGOV செயலியில் உள்ள நேரலை ஒளிபரப்பு (Live Streaming) அம்சத்தின் மூலம் இந்தப் போட்டிகளைப் பார்க்க முடியும். இதன் மூலம் ஆர்.டி.எம் (RTM) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அலைவரிசைகளான TV1, TV2 மற்றும் Okey TV ஆகியவற்றின் நேரடி உலகக்கிண்ண ஒளிபரப்புகளை பயனர்கள் எளிய முறையில் அணுகலாம்.
பல்வேறு அரசு முகமைகளின் சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட MyGOV செயலியை, தற்போது மேலும் மேம்படுத்தும் முயற்சியாக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ கூறுகையில்: மலேசிய மக்கள் டிஜிட்டல் அரசு சேவைகளை மிக எளிதாகப் பெறுவதை உறுதி செய்ய, ‘மடானி’ (Madani) அரசாங்கம் எடுத்து வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே MyGOV செயலி விளங்குகிறது. இந்த செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் தரம், வேகம் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
தற்போது, இந்த MyGOV செயலியில் பயணக் கட்டுப்பாடுகள் குறித்த விபரங்களைச் சரிபார்த்தல், கோரப்படாதப் பணம் (Unclaimed Money) தேடுதல் மற்றும் ‘ப்ரைஸ்கேட்சர்’ (PriceCatcher) விலை ஒப்பீட்டுத் தளம் உள்ளிட்ட 19 அரசு நிறுவனங்களின் 51 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2025 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 2.2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இதில் இணைந்துள்ளனர்.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் 2026 ஃபிஃபா உலகக்கிண்ணக் கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளை மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பும் உரிமத்தை RTM மற்றும் Unifi TV ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.