Offline
Menu
கனத்த இதயத்துடன்..வேலைக்கு திரும்புகிறேன்…மீண்டும் கார் ரேசிங்கில் களமிறங்கிய அஜித்
By Administrator
Published on 06/06/2026 11:00
Entertainment

சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கினார்.

கார் ரேசிங்

இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய ரேசிங் தொடர்களிலும் அஜித்குமார் அணி கலந்து கொண்டு வருகிறது.

இந்தநிலையில், பிரான்சில் நடைபெற இருக்கும் கார் ரேசிங்கிற்கு அஜித் குமார் தயாராகி வருவதாக அவரது அதிகாரபூர்வமான எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

தாயார் மறைவு

அஜித்குமார் கார் ரேசிங் மீதான பற்றால் அதில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் (மே.30) அவரது தாயார் காலமானார். அவரது தாயார் மறைவிற்கு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் திரை உலகினர் அஞ்சலி செலுத்தினர்.

தனது தாயார் இறந்த தினத்தில் அஜித், “அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவரது இருப்பும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்வை வடிவமைத்தவை. அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்” எனக் கூறியிருந்தார்.

தற்போது, இழப்புக்குப் பிறகு 4 நாட்களில் மீண்டும் கார் ரேசிங்கிற்குத் தயாராகியுள்ளார். அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறும் போட்டியில் அவரது குழு பங்கேற்கிறது.

அஜித்குமார் கார் ரேசிங் பக்கத்தில், “கனத்த இதயத்துடன் வேலைக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனால், வாழ்க்கை நிச்சயமாகத் தொடர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

Comments