Offline
Menu
மலேசிய அரசின் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை மக்கள் வரவேற்பு!
By Administrator
Published on 06/09/2026 11:00
News

மலேசியாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் முகநூல் , இன்ஸ்டாகிராம் , டிக்டாக் , மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக ஊடகத் தளங்களில் புதிய கணக்குகளைப் பதிவு செய்ய இனி அனுமதி இல்லை என அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஜூன் 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இப்புதிய விதியின் கீழ், ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் கணக்குகள் முடக்கப்படுவதற்கு முன்பு, தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மாற்றுவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

​பெற்றோர் ஒப்புதல், நேரக் கட்டுப்பாடு மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு ஆகிய முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய இந்த அதிரடி நடவடிக்கை குறித்து, நாட்டின் பல்வேறு தரப்பினரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் கருத்துக்களைப் மக்கள் ஓசையுடன் பகிர்ந்து கொண்டனர்.

​​சமூக ஊடகங்களுக்கான இந்த அரசு சட்டம் ஒருபுறம் இருந்தாலும், இளம் பெற்றோர்கள் தங்களின் மிகச் சிறிய குழந்தைகளுக்குக் கைத்தொலைபேசிகளை விளையாடுவதற்கோ அல்லது அமைதியாக இருப்பதற்கோ கொடுப்பதைத் தங்களின் சுயக்கட்டுப்பாடாகக் கொண்டு முற்றிலும் தவிர்க்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்மணிகள் வலியுறுத்தினர். ​சிறு வயதிலேயே கைத்தொலைபேசிப் பழக்கத்திற்கு அடிமையாகும் குழந்தைகள், பிற்காலத்தில் சமூக ஊடகங்களின் திரை போதைக்கு மிக எளிதாக ஆளாகிவிடுகிறார்கள். எனவே, அடிமட்டத்திலிருந்தே இந்தப் பழக்கத்தை மாற்றுவது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது.

​”அரசாங்கத்தின் இந்த முடிவு மிகவும் காலோசிதமானது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் என்பது எதிரி அல்ல என்றாலும், அதன் பயன்பாடு ஒருவருடைய வயது மற்றும் முதிர்ச்சியின் நிலைக்கு ஏற்ப மட்டுமே இருக்க வேண்டும். 16 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைப் பாதுகாத்து, அவர்களின் எதிர்காலத்தை நல்வழியில் உருவாக்குவதற்கு இந்தச் சட்டம் ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.” என்று டத்தோ சீனிவாசன் தெரிவித்தார்.

​​”பிள்ளைகளின் மனவளர்ச்சியும் குணநலன்களும் தூய்மையாக இருக்க வேண்டும். வல்லுநர்களின் கூற்றுப்படி, பதின்ம வயதின் இறுதிவரை சுயக்கட்டுப்பாடு மற்றும் சரியான முடிவுகளை எடுக்கும் மூளையின் பகுதிகள் முழுமையாக வளர்ச்சியடைவதில்லை.

அளவுக்கு அதிகமான சமூக ஊடகப் பயன்பாட்டினால் சிறுவர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களிலேயே முழுமையாக மூழ்கி விடுகின்றனர். இது அவர்களின் அன்றாட ஆரோக்கியமான செயல்பாடுகளையும், குடும்பத்துடனான நேரத்தையும் முற்றிலும் முடக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments