ஜெனீவா:
சமூக நீதி மற்றும் சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை மேம்படுத்தும் நோக்கில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ‘சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணியில்’ மலேசியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
இதற்கான மலேசியாவின் பங்களிப்புக் கடிதத்தை, அந்நாட்டின் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், ஐ.எல்.ஓ.வின் தலைமை இயக்குநர் கில்பர்ட் எஃப். ஹூங்போவிடம் இன்று சமர்ப்பித்தார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் 114-வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் போது இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் கூறுகையில், “ஐ.எல்.ஓ.வின் கொள்கைகளுக்கு இணங்க, தொழிலாளர் பாதுகாப்பை விரிவுபடுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மலேசியா உறுதியுடன் கடமைப்பட்டுள்ளது,” என்றார்.
மேலும், மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு மற்றும் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையில், தொழில்துறை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இணக்கமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் இந்த மாநாட்டில் வலியுறுத்தினார்.