Offline
Menu
தமிழகத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1,328 பேர் கைது: காவல் துறை அதிரடி நடவடிக்கை
By Administrator
Published on 06/14/2026 09:00
News

தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரப்படி மாநிலம் முழுவதும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்ற குணத்தார், போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 28.05.2026 முதல் 10.06.2026 வரை சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் மீது மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நடவடிக்கைகளின் போது 36,740 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர். அவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1,328 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையில் 01.06.2026 முதல் 10.06.2026 வரை மொத்தம் 2,939 ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றுதல் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதற்கான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரும் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று போதைப் பொருள் ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நடவடிக்கையில் 202 போதைப் பொருள் குற்றவாளிகள் சிக்கினார்கள். அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 231 கிலோ கஞ்சா, 4 ஆயிரத்து 73 போதை மாத்திரைகள், 22.55 கிராம் மெத்தாம்பெட்டமைன், 362 கிலோ குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.போதைப் பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 14 மோட்டார் சைக்கிள், 3 ஆட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளை நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையாக கடந்த 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையில் 2,939 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் கோர்ட்டில் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Comments