சிரம்பான்:
தனது இரண்டு வயது வளர்ப்பு மகனைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படும் 24 வயதுடைய இளைஞர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
சிறுவனின் பெற்றெடுத்த தாயிடமிருந்து நேற்று இரவு 8:30 மணியளவில் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு மணி நேரத்தில் சிரம்பான் துங்கு ஜாபார் மருத்துவமனை (HTJ) வளாகத்திற்கு முன்பாக அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைமை உதவி ஆணையர் (ACP) முகமட் யாத்திம் ஒஸ்மான் தெரிவித்தார்.
“சிரம்பான் – ஜெலுபு சாலையில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், பாதிக்கப்பட்ட சிறுவன், அவனது 20 வயது மதிக்கத்தக்க தாய் மற்றும் வளர்ப்பு தந்தை ஆகியோர் காரில் இருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஜாலான் ராசாவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து, உணவு விநியோகிப்பாளராக (Delivery Rider) பணிபுரியும் அந்த நபர், சிறுவனைப் பலமுறை தாக்கி காயம் ஏற்படுத்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் உடலைச் சோதனை செய்ததில், அவனது உடலின் முன்பக்கமும் பின்பக்கமும் கிள்ளப்பட்டதால் ஏற்பட்ட சிவந்த தழும்புகளும் காயங்களும் இருப்பது கண்டறியப்பட்டது. அச்சிறுவன் தற்போது துங்கு ஜாபார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
கடந்த ஏப்ரல் மாதம்தான் இந்தத் தம்பதியருக்குத் திருமணம் நடந்துள்ளது என்று முகமட் யாத்திம் கூறினார். மேலும், கைது செய்யப்பட்ட நபருக்கு முன் குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும், அவரது முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டதற்கான அறிகுறி இல்லை (Negative) என்றும் தெரியவந்துள்ளது.
தற்போது, அந்தச் சந்தேக நபர் ஜூன் 20-ஆம் தேதி வரை 7 நாட்களுக்குக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.